வந்தாரை வாழ வைக்கும்  
ஆலங்குளம்! 
இது வெறும் வாய் வார்த்தை அல்ல.. 
எல்லையில் இருகரம் கூப்பி நிற்கும்  
ஒக்க நின்றான் மலையே ஊரின் தன்மையை  
உலகிற்கு சொல்லும்! 
                        கரையில்லா குளமும்  
கதவில்லா ஹோட்டலுமே  
அடையாளமாய் இருந்தது  
ஒரு காலத்தில்! 
உழைப்பில்லா உள்ளமும்  
சேமிப்பில்லா இல்லமும் இல்லை  
என்ற அடையாளம் தற்காலத்தில்.. 
                        எங்கள் ஊரின் கட்டிடங்களில், 
எங்கள் கல்வியில், 
எங்கள் உணவில்,  
எங்கள் ஆடைகளில்,  
எங்கள் சுவாசத்தில் கலந்திருக்கிறது 
புகையிலை வாசம்... 
                        உடனே , நீங்கள் அனைவரும்  
புகைப்பிடிப்பவரா என்று 
கேட்டு விட வேண்டாம்.... 
புகையை விற்று  
புன்னகையை வாங்கியவர்கள்  
எங்கள் பீடித்தொழிலாளர்கள்.  
                         
                        வான்மழை பொய்த்து  
வருடக்கணக்கில் வறட்சி வாட்டிய காலத்தில் 
இயற்கையின் ஆதிக்கத்தையும்  
ஊதாரிக்கணவன் குடித்து 
அழிந்த போது ஆணாதிக்கத்தையும் 
நோய்க்கொடுமை வீட்டை சுற்றிய போதிலும், 
கல்வியின்மையில் வீடு இருண்டு கிடந்த போதிலும் 
சமூக வியாதியான வறுமையையும்  
கோணலான சோசலிசத்தையும்  
வளைக்கரம் கலகலக்க  
வென்றெதிர்த்து வெற்றி மாலை சூடியது  
பீடி சுற்றும் கைகள்! 
                        ஆட்சியாளர்களே! 
பீடிக்கு எதிரான உங்கள் கோஷத்தை 
போதைக்கு எதிரான கோஷமாக மாற்றுங்கள்... 
நாங்களும் அதில் பங்கெடுக்கிறோம்.... 
இதன் மீது மட்டும்  
எதிர்ப்பை காட்டி  
உழைக்கும் பாமர மக்களின் 
தன்னம்பிக்கை மீது படை எடுக்காதீர்கள்! 
                        ஆயிரம் ஆண்டு 
பெருமை இல்லை எங்களுக்கு .... 
சில நூறு ஆண்டுகளுக்குள் 
ஆனால்  
ஒரு ஊரை நிர்மாணித்து 
தாலுகாவாய் நிமிர்த்திய  
வரலாறு உண்டு எங்களுக்கு!  
                        எப்பாவி செய்த பாவமோ? 
வழக்குகளும் வம்புகளும் 
விரட்டியடித்ததாலேயே 
வந்தமர்ந்தோம் அப்பாவிகளாய்.... 
அடுத்த வேளை உணவும் 
அந்த நேரக் கனவாய் இருந்தது அப்போது  
இப்போது அண்டை மாவட்டங்களின்  
உணவுத்தேவையை தீர்மானிக்கும்  
வியாபாரத்தலமாய் ஆலங்குளத்தை  
உயர்த்தியிருப்பது 
எங்கள் உழைப்பும் திட்டமிடலுமே!  
                        நதிகள் இல்லை... 
கடல் இல்லை... 
கரும வீரன் கடைக்கண் பட்டு  
அமைந்திருக்கும் ஒற்றைக்கால்வாயிலும்  
தண்ணீர் நிரந்தரமில்லை... 
மிகப்பெரிய ஆலை இல்லை... 
செல்வம் கொழிக்கும் பணப்பயிர் விளையவில்லை... 
ஆனாலும் இங்கே தங்கம் விளைகிறது.... 
எங்கள் உழைப்பாலும் , உதிரத்தாலும்  
                        சகோதரத்துவம் உயர்ந்து  
மனங்கள் இணையும் நேரத்தில் 
மதம் சற்று விலகி நிற்கிறது 
ஜாதி தள்ளியே நிற்கிறது.. 
காட்சிகள் கண்ணுக்கு புலப்படாமலேயே போகிறது... 
கொள்கை பிடிவாதங்களோ  
உறவின் ஈரத்தில் நீர்த்துப்போகிறது... 
                        சமத்துவபுரம் 
இன்றைய சமுதாயத்தின் கனவு! 
அது எங்களுக்கு கை கூடிய நிகழ்வு                           |